காதலின் பக்கவிளைவுகள்
அட்டைகள் தீர்ந்துபோன
எடைகாட்டும் எந்திரத்தில்
ஏறி நிற்கிறாள் அந்தச்சிறுமி.
நான் உன்னைக் காதலிக்கிறேன்.
********
ஏற வேண்டிய பேருந்தை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தவறவிடுகிறேன்
நேரங்கெட்ட நேரத்தில்
மாலை ஐந்து மணிக்கு தூக்கம் வருகிறது
விழித்தால்
விடியற்காலையா அந்திமாலையா குழப்பம் வருகிறது
பேசுபவர்களிடம்
காதுகளை விடுத்து கண்களைத் தருகிறேன்
காதலின் பக்கவிளைவுகளுக்கான பட்டியல்
நீண்டுகொண்டேயிருக்கிறது.
********
பளிங்கு போன்ற நீரோடை
பாலைப் போன்ற நீர்வீழ்ச்சி
பழமரங்கள் தேனடைகள்
பச்சைப்பசேலென்ற வனம்
தென்றலுடன் கொஞ்சம் சாரல்
உன்னுடனான எனது இரவு.
********
நெருங்கி வந்து
என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்
நீ விழித்திருக்கிறாய்
என்பது உறக்கத்திலும் புரிகிறது
காதல் எளிதான வரையறைக்குள் சிக்கிவிடும்
சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.
.