Wednesday, April 8, 2009

மற்றும் காமம்..

நேற்றிரவு
‘அத்தைமடி மெத்தையடி..’
பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தோம்
மாசமாக இருக்கும்
என் தங்கைக்கு
போன் செய்யத்துவங்கினாய் நீ.!

********

நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பு
மற்றும் காமம்.!

********

உன் அறிவும் திறனும் ஆளுமையும்
என்னை வியக்கச்செய்கிறது
இருப்பினும்
இரவுகளில்
ஒரு மாணவியைப்போல
இரந்து நிற்கிறாய்.!

********

ஒரு தக்கையைப்போல
காதலின் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டேயிருந்தேன்
நீ வந்தாய்,
ஒரு கல்லைப்போல
மூழ்கிப்போய்விட்டேன்.!

.

Saturday, March 14, 2009

வெட்கத்தால் செய்யப்பட்ட அழகு!

தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொள்
என்றேன்
சிணுங்கினாய்
தேவதைகள் தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள
மொழிகள்
தேவையில்லை என்று தோன்றியது எனக்கு.!

********

ரயிலடியில்
மழைபெய்தாலே போதும்..
உன் ஞாபகத்தில்
என் நினைவுகள்
‘சொத சொத’வென நனைந்துவிடுகின்றன.

********

உன் வெட்கத்தையெல்லாம்
கூட்டிச் சேர்த்து செய்யப்பட்டதுதான்
உன் அழகு!
நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது.

********

என் காதல்
திசைமறந்த ஒரு வண்டைப்போல
உன்னையே சுற்றிச் சுற்றி வருகிறது.

.

Tuesday, March 10, 2009

காதலின் பக்கவிளைவுகள்

அட்டைகள் தீர்ந்துபோன
எடைகாட்டும் எந்திரத்தில்
ஏறி நிற்கிறாள் அந்தச்சிறுமி.
நான் உன்னைக் காதலிக்கிறேன்.

********
ஏற வேண்டிய பேருந்தை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தவறவிடுகிறேன்
நேரங்கெட்ட நேரத்தில்
மாலை ஐந்து மணிக்கு தூக்கம் வருகிறது
விழித்தால்
விடியற்காலையா அந்திமாலையா குழப்பம் வருகிறது
பேசுபவர்களிடம்
காதுகளை விடுத்து கண்களைத் தருகிறேன்
காதலின் பக்கவிளைவுகளுக்கான பட்டியல்
நீண்டுகொண்டேயிருக்கிறது.

********
பளிங்கு போன்ற நீரோடை
பாலைப் போன்ற நீர்வீழ்ச்சி
பழமரங்கள் தேனடைகள்
பச்சைப்பசேலென்ற வனம்
தென்றலுடன் கொஞ்சம் சாரல்
உன்னுடனான எனது இரவு.

********
நெருங்கி வந்து
என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்
நீ விழித்திருக்கிறாய்
என்பது உறக்கத்திலும் புரிகிறது
காதல் எளிதான வரையறைக்குள் சிக்கிவிடும்
சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.

.

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP