Saturday, September 20, 2008

இரண்டாவது இரவு

திருமண‌மாகி பல நாட்களுக்குப்பிறகு
முதல் முறையாக நீ அழைத்த அந்த நாளை
நினைவிருக்கிறதா உனக்கு?
அன்றுதான் நிகழ்ந்தது அந்த இரண்டாவது இரவு.

*******

காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்.!

*******

எல்லா நேரங்களிலும்
ஒரு குழந்தையைப்போல
தெரிந்துகொள்வதற்காக‌
என்னையே சார்ந்து நிற்கிறாய்.
இர‌வுக‌ளில்நான் உன்னைச்சார்ந்து நிற்கிறேன்.

*******

என‌க்கான
அழ‌கு, காத‌ல், காம‌ம்
இம்மூன்றையும்
உன் ஜ‌டையைப்போல‌ பின்னிக்கொண்டேயிருக்கிறாய்.!


Friday, July 25, 2008

சிரிப்பாய் சிரிக்கும் கவிதைகள்

கவிதைகளை
எப்போதுமே
ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!

*****

ஒவ்வொரு நாளும்
அலுவலகம் கிளம்பும்போதும்
மழையைப் போலவே என்னைத்தடுக்கிறாய்.
வெளியே மழையாகவும்
உள்ளே குடையாகவும்
ஒரே சமயத்தில் நீ.
உன் மீதான விருப்பமா தணியப் போகிறது?
இந்த மழையில் நனைந்தேதான்
இந்த வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது.!

*****

ஒரு பெண்ணைப் பார்க்கவென்று
சொல்லித்தான்
என்னை அழைத்துவந்தனர்,
உன்னைப்பார்ப்பேன் என்று
நான் நினைக்கவுமில்லை.!

*****

தீவிரமான அலுவலில் மூழ்கியிருக்கும் போதும்
உனக்கான ஒரு கவிதை
நெஞ்சில்
உருவாகிக்கொண்டேயிருக்கிறது.

.

Tuesday, June 24, 2008

முதல் இரவு

இத்தனை வருடக் காத்திருத்தலுக்குபின்
வந்த
அந்த முதல் இரவு கூட
சில மணி நேரங்களே விழித்திருந்தது.

******

வாழ்வின் வழிநெடுகிலும்
தவிக்கின்ற தாகத்தைத் தீர்க்கின்ற
மழையாய்
இந்தக்காதல்
இருந்துகொண்டேயிருக்கிறது.!

******

நான் கொதிக்கும் நீரைப்போல
ஆவியாகிறேன்
நீ குளிர்ந்த காற்றைப்போல
நீராகிறாய்.!

******

ஒரு ஒளிப்புள்ளி ஒளிவட்டமாய் சிதறுவதைப்போல
என் காதல் உன்னைச் சுற்றிலும்
சிதறிக்கொண்டேயிருக்கிறது.

.

Saturday, May 24, 2008

நீ முத்தமிடும் அழகு

நீ முத்தமிடும் அழகை
ஒவ்வொரு முறையும் என் கவிதை சொல்ல முயன்று
தோற்றுப்போகும்.!

******

நீ எப்போதெல்லாம்
பச்சை சேலை கட்டிக்கொள்கிறாயோ
அப்போதெல்லாம் நான் சீக்கிரமாக
வேலைக்குச் செல்லமுடிவதில்லை!

******

எப்போதாவது தோன்றுகிறது
இன்னும் எதுவும் முடியவில்லை என.!

******

எல்லோருமே கண்ணாடியை பார்த்துக்கொள்கிறார்கள்
அழகு
உன் முகத்தைப்பார்த்துக்கொள்கிறது.!

.

மழையாக வந்தாய்!

தாளமுடியாத வேட்கையில் வெடித்துக்கிடந்தேன்
உடலும் மனமும் குளிரக் குளிர மழையாக வந்தாய்.!

******

எல்லாத்திசைகளிலிருந்தும் உன்னைத் தழுவமுடியவில்லையே
இந்தக் காற்றைப்போல.!

******

பார்த்துக்கொண்டிருக்கும்போதே
பிரமாண்டமாகிவிடுகிறது உன் அழகு
இந்த மனிதப் பார்வை போதவில்லை எனக்கு.!

******

உறங்கிக்கொண்டிருக்கும் உன்னைத் தொல்லை செய்யவேண்டும்
உடுத்திக் கொண்டிருக்கும் உன்னைத் தொல்லை செய்யவேண்டும்
உணவெடுத்துக் கொண்டிருக்கும் உன்னையே
உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்
உன்னைச் சேரவேண்டிய காதலால் நிரம்பி
மூர்ச்சையடைந்துகொண்டிருக்கிறேன்...
எல்லாம் முடிந்துவிடும் முன்பே வா !

.

Thursday, May 8, 2008

நீ இல்லாமலும் கூட..

அன்பான கணவன்
நீ கேட்டதைப்போலவே அழகான இரு பெண்கள்
நீ இல்லாவிட்டாலும் கூட
நான் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன் !

******

நீ மகிழ்ந்தால் மகிழ்வேன்
நீ அழுதால் அழுவேன்
வாழ்வின் வழிநெடுக
நீயறியாமல் உன்னைத் துரத்திக்கொண்டேயிருப்பேன்
ஒரு ஒற்றனைப்போல.!

******

காதல் பகலைப்போன்றது
காமம் இரவைப்போன்றது !

******

இளமை கொப்பளிக்க
இளம்பெண்கள் கடந்து போகும் போதெல்லாம்
காமம் ஆர்ப்பரிக்கின்றது!
காதல் அமைதிகாக்கின்றது!

.

இரவுகள் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்றவை

இன்று என்ன நிகழும் என்ற ஆவலோடு வருகிறேன்
ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல இன்னொன்று இருப்பதில்லை
ஒரு இரவைப்போல இன்னொன்று இருப்பதில்லை!

******

உன் கட்டுப்பாடு
என்னை எதுவும் செய்ய முடிவதில்லை
உன் காதல்
என்னை என்ன வேண்டுமானாலும் செய்துவிடுகிறது !

******

காற்றுக்கும் மழைக்கும்
பல்வேறு வடிவங்கள்
உனக்கிருப்பதைபோலவே !

******

அள்ளிச்செல்லும் அழகு
பொங்கி வழியும் சிரிப்பு
அழைக்கும் கண்கள்
இரங்கும் மனது
நிறைக்கும் அன்பு
எல்லாம் உன்னைப்போலவேதான்
ஆனால்
இவள் நீயல்ல !

.

Wednesday, April 23, 2008

நீரைப்போலவே நீயிருக்கிறாய்

ஒளி உன்னை ஊடுருவுகிறது
மலர்கள் உன்மீது மிதக்கின்றன
தென்றல் உன்னுடன் சலசலக்கிறது
வேட்கை தணிவிக்கிறாய்
நான் நீடித்திருக்க உயிர்ப்பொருளாகிறாய்..
நீரைப் போலவே நீயிருக்கிறாய்.!

*******

வெட்டுப்பட்ட இடங்களிலெல்லாம் துளிர்த்துக்கொண்டேயிருக்கும்
முருங்கையைப் போன்றது
உனக்கும் எனக்கும் இடையேயான காதல்.!

*******

விடிந்து விடப்போகிறதே
என்ற கவலை வேண்டாம் உனக்கு,
இரவை நீட்டித்துக்கொடுப்பாள் அவள்.!

*******

நடு இரவில் நெருங்கிவந்து
என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்.
நீ விழித்திருக்கிறாய் என்பது உறக்கத்திலும் புரிகிறது
காதல் எளிதான வரையறைக்குள்
சிக்கிவிடும் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று!

.

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP